ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால் மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது
நாமக்கல், 'தேசிய நெடுஞ்சாலை பணிக்கு, ஈச்சங்காடு பெரிய ஏரியில் இருந்து மண் அள்ள அனுமதி அளிக்க கூடாது' என, கிராம விவசாயிகள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், பள்ளக்குழி பஞ்.,க்குட்பட்ட ஈச்சங்காடு பெரிய ஏரியில், தேசிய நெடுஞ்சாலைக்கு மண் அள்ளுவதற்கு ஆட்சேபனை இல்லை என, கிராம மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஏரியில் மண் அள்ளுவதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் விரும்பவில்லை. காரணம், 2020ல், குடிமராமத்து பணியின்போது, முதன் முறையாக விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதித்தோம்.அதேபோல், 2024ல், குடிமராமத்து பணியின்போது, டிராக்டரில் மண் அள்ளப்பட்டது. அதன் காரணமாக, கரை பலவீனமாக உள்ளது. மதகும் செயலற்றுள்ளதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அருகில் உள்ள கரட்டுவளவு, செண்பகமாதேவி, கசப்பானுார் ஆகிய ஏரிகளில் உள்ள மண்ணை, தேசிய நெடுஞ்சாலைக்கு அள்ளிவிட்டனர். தற்போது, வண்டல் மண் தேவைக்கு இந்த ஏரி மட்டுமே உள்ளது. மக்கள் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலை பணிக்காக மண் அள்ள உரிமம் வழங்க வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.