உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் அள்ளியதை தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ., மீது தாக்குதல் குண்டாசில் கைது செய்யக்கோரி தர்ணா போராட்டம்

மண் அள்ளியதை தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ., மீது தாக்குதல் குண்டாசில் கைது செய்யக்கோரி தர்ணா போராட்டம்

நாமக்கல், முறைகேடாக மண் அள்ளியதை தட்டிக்கேட்ட, வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம், வையப்பமலை அடுத்த மொஞ்சனுாரை சேர்ந்தவர் சிவகாமி, 35; இவர், மல்லசமுத்திரம், பாலமேடு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பாலமேடு, காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரது பட்டா நிலத்தில், முறைகேடாக மண் அள்ளுவதாக அப்பகுதி மக்கள், வி.ஏ.ஓ., சிவகாமிக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதிக்கு சென்ற, வி.ஏ.ஓ., சிவகாமி, 'அரசு அனுமதியின்றி, சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளக்கூடாது' என, எச்சரிக்கை விடுத்து, மண் அள்ளுவதை தடுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த தனபால், மொஞ்சனுார் பறையக்காடு பகுதியை சேர்ந்த மண் புரோக்கர் சீனிவாசன், 57, என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, புரோக்கர் சீனிவாசன் மற்றும் அவரது அடியாள் செம்பாம்பாளையத்தை சேர்ந்த கிருபா, 35, ஆகியோர் மதுபோதையில், வி.ஏ.ஓ., சிவகாமி வீட்டிற்கு சென்றனர். அங்கு, 'நாங்கள் அப்படித்தான் மண் அள்ளுவோம்; உன்னால் என்ன செய்ய முடியும்' என, கொலை மிரட்டல் விடுத்து, வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சீனிவாசனை பிடித்து எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். சீனிவாசனை கைது செய்த போலீசார், திருச்செங்கோடு நீதிமன்ற காவலில் வைத்தனர். அடியாள் கிருபா தப்பி ஓடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த சிவகாமி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை, குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்; பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, டி.ஆர்.ஓ., சுமனிடம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வி.ஏ.ஓ.,வை தாக்கிய சீனிவாசனை, குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.ஓ., சுமன் உறுதியளித்தார். இதையடுத்து, தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல், திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகம் முன், கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை