பஸ் ஸ்டாப்பில் மாணவியரை இறக்கிவிடாததால் சாலை மறியல்
எலச்சிபாளையம்: நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், மாணவியரை இறக்கிவி-டாமல் அலைக்கழிப்பு செய்த அரசு பஸ் நிர்வாகத்தை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் மூவர், நேற்று மதியம், தேர்வு எழுதிவிட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு செல்ல அரசு பஸ்சில் ஏறியுள்ளனர். அதை தொடர்ந்து, கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்காது. கொன்னையார் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள் எனக்-கூறி, மாணவியரிடம் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. இதை கண்டித்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ராசிபுரம், தி.கோடு டிப்போ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நல்லாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.