சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம் முதல்வருக்கு சங்க நிர்வாகிகள் நன்றி
பள்ளிப்பாளையம்: ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில், சாய ஆலைகளில் புதிதாக சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், பழைய சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்யவும், தமிழக அரசு சார்பில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில், ஜவுளி பதனிடும் பிரிவுக்கு மூலதன மானியமாக, 268 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், சாயம் மற்றும் ஜவுளி பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதையடுத்து, பள்ளிப்பாளையம் டையிங் சங்க செயலாளர் கிருஷ்ணராஜ், ஈரோடு ஆல் டெக்ஸ் ப்ராசஸ் தலைவர் முருகேசன், செயலாளர் பழனிசாமி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சாயம் மற்றும் ஜவுளி பதனிடும் தொழில் சார்ந்த சங்க நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், சாய கழிவுகளை குழாய்கள் மூலம் எடுத்துச்சென்று, கடலில் கலக்கவும் தேவையான நடவடிக்கை அரசு மேற்கொண்டால் நிரந்தர தீர்வு ஏற்படும் என, சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். சந்திப்பின் போது, அமைச்சர்கள் உடனிருந்தனர்.