நாமக்கல்: நாமக்கல் - மோகனுார் சாலை, பாரதி நகரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பராயன், 82. இவர் கடந்த, 2023 ஜனவரியில், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றில், 143 ரூபாய் செலுத்தி சிக்கன் சூப் வாங்கினார். அதற்கு வழங்கப்பட்ட ரசீதில், பார்சல் கட்டணம், 6.50- ரூபாய் என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, 'பார்சலுக்கு தனி கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தக நடைமுறை' என, சுப்பராயன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில் கூறியிருந்ததாவது:பார்சலுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டது தவறு. மேலும், உணவகத்தின் பெயரும், முகவரியும் அடங்கிய விளம்பரத்துடன் வாடிக்கையாளருக்கு சிக்கன் சூப் பார்சல் வழங்கப்பட்டுள்ளது. பார்சலுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கும் போது, சொந்த விளம்பரத்தை செய்தது உணவகத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.வாடிக்கையாளர் பார்சலுக்காக செலுத்திய, 6.50 ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், செலவு தொகையாக, 1,000 ரூபாயை வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஹோட்டல் நிர்வாகம், நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும்.மேலும், ஹோட்டல் உரிமையாளர், ஒரு வார காலத்திற்குள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பார்சல் கவரில் விளம்பரம் செய்தால், பார்சல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என, உறுதிமொழி வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.