மோகனுார்: தண்ணீர் பந்தல் முன் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதால், தண்ணீர் அருந்த முடியாமல் பொதுமக்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கோடை வெயில் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும், 30 வரை, நான்கு நாட்களுக்கு, கடலோரம் அல்லாத தமிழக வடக்கு உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், வெப்பநிலை அதிகபட்சம், 106 டிகிரி பாரன்ஹீட்டை எட்டி உள்ளது. வெப்ப தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, கம்மங்கூழ், இளநீர், நுங்கு, வெள்ளரி போன்றவற்றை அருந்தியும், உண்டும் வருகின்றனர். வெயில் கடுமையாக இருப்பதால், சிறுவர் முதல், பெரியவர் வரை அனைவரும் வெளியே தலைகாட்ட முடியாமல், வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். நாமக்கல்லில் நேற்று, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.இந்நிலையில், மோகனுார் பஸ் ஸ்டாண்டில், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. அங்கு, இரண்டு மண் பானை வைத்து, பொதுமக்கள் தண்ணீர் குடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த தண்ணீர் பந்தலின் முன், வெளியூர் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால், தண்ணீர் குடிப்பதற்கு வரும் பயணிகள், எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.