நாமக்கல் 'போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அதனால், கூடுதலாக, இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கொல்லிமலை, திண்ணனுார்நாடு பஞ்., வாசலுார்பட்டி நடுநிலைப்பள்ளி மேலாண் குழுவினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை தாலுகா, திண்ணனுார்நாடு பஞ்., வாசலுார்பட்டியில், பஞ்., நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 132 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட, ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டடம் இல்லை. ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. 6, 7, 8ம் வகுப்பிற்கு தனித்தனியாக பாடம் நடத்தும் நிலை உள்ளது.அதனால், சில நேரங்களில், இரண்டு வகுப்புகள் வெளியே தரையில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு மாணவ, மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைக்காலத்தில் வகுப்புகள் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. 2019-20ம் கல்வியாண்டில், இரண்டு வகுப்பறைகள் இடிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, இதுவரை புதிய கட்டடம் வழங்கவில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.