மேலும் செய்திகள்
6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
25-Sep-2025
நாமக்கல், ''நாமக்கல் மாவட்டத்தில், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், 4.11 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வனத்துறை சார்பில் பனை விதைகள் நடுதல் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும், 2025ம் ஆண்டிற்கான பனை விதை நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, 2024 பனை விதை நடும் இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இதன் விளைவாக, 38 மாவட்டங்களில், 44 லட்சத்து, 90,423 பனை விதைகள் நடப்பட்டன. 'உதவி' மொபைல் செயலி மற்றும் வலை போர்டல் மூலம் முழுமையான புவிசார் குறியிடுதல் இயக்கப்பட்டது.இச்சாதனையின் அடிப்படையில், 2025-ம் ஆண்டு பனை விதை நடவு செய்யும் பணி, கடந்த, செப்., 16ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும், ஆறு கோடி பனை விதைகளை இலக்காக கொண்டு, வரும், 15ல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் வரை, இந்த பணி தொடரும். நாமக்கல் மாவட்டத்தில், நீர்நிலைகள், தரிசு நிலங்கள் மற்றும் பனை காடுகளை உருவாக்குவதற்கு அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், 4.11 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் உதவி செயலியில் பதிவு செய்து, நடப்பட்ட ஒவ்வொரு விதையையும், புவி-குறியீடு செய்து முறையான கண்காணிப்பை உறுதிசெய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.இன்று அர்ப்பணிப்புடன் நடப்படும் ஒரு விதை கூட காலநிலை மீள்தன்மை மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Sep-2025