பழைய தார்ச்சாலை முற்றிலும் அகற்றிவிட்டு அரசு விதிப்படி புதிய சாலை பணி துவக்கம்
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராக உள்ளார். இந்நிலையில், ப.வேலுார், 17வது வார்டு, தெற்கு தெரு, மாரியம்மன் கோவில், செட்டியார் தெரு ஆகிய பகுதிகளில், 1.62 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. அப்பகுதியில் இருபுறமும் உள்ள சாக்கடை வரை சாலை அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் பழைய தார்ச்சாலையை அகற்றிவிட்டு, புதிய தார்ச்சாலை போட வேண்டும் என்பதே விதிமுறையாகும்.ஆனால், பழைய தார்ச்சாலையை அகற்றாமலேயே, சாலையை பெயர்த்து அதன் மீதே புதிய சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதை தொடர்ந்து, அரசு விதிப்படி சாலை அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, 17வது வார்டு கவுன்சிலர், பா.ம.க., சுகந்தி தெரிவித்தார். இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ப.வேலுார் டவுன் பஞ்., அதிகாரிகள், நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரரிடம் அரசு விதிப்படி சாலை அமைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும், 16வது வார்டு பகுதியில் இதேபோல் மேற்கொண்ட பணியை தடுத்து நிறுத்தி, முறைப்படி சாலை பணியை தொடங்க வேண்டும் எனவும், இருபுறமும் உள்ள சாக்கடை வரை சாலை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.