நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ராசிபுரம், ராசிபுரம்-நாமக்கல் சாலையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, செவ்வாய்கிழமை இரவு அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 16ல் விழா பந்தல்போட முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று பெண்கள் புனிநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு புனித நீரில் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று, 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிக்கு, கொடியேற்றம் நடக்கவுள்ளது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா, மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 8 வரை மண்டகப்படி கட்டளையும், 10 முதல், 23 வரை விடையாற்றி கட்டளையும் நடக்கவுள்ளது. விழாவிற்கு, இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் நாமக்கல் சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடைகள், ராட்டினம் என மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.