| ADDED : ஜூலை 11, 2024 12:36 AM
புதுச்சத்திரம்: புதன்சந்தை அருகே, பொம்மகுட்டை மேட்டில் ஓடிய அரசு பஸ்சில் இருந்து குதித்து, டிக்கெட் பரிசோதகர் உயிரிழந்தார். நாமக்கல் - சேலம் சாலை, முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58; சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி, நேற்று சேலத்திற்கு பணிக்கு செல்வதற்காக, அதிகாலை, 4:00 மணிக்கு, முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பில், மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், பின் பக்க படியில் ஏறி அமர்ந்தார். பின், இரண்டு படிக்கட்டுகளில் உள்ள கதவுகளை மூடிய பின், டிரைவர் பஸ்சை இயக்கினார். பஸ், பொம்மகுட்டைமேடு அருகே சென்ற போது, கிருஷ்ணமூர்த்தி திடீரென பின்பக்க கதவை திறந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.