ஓட்டு அரசியலுக்கு இலவசம் வழங்கினால் எதிர்ப்போம்: பா.ஜ., அண்ணாமலை பளிச்
திருச்செங்கோடு: ''மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். ஓட்டு அரசியலுக்காக வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்கும் விழா, நேற்று மாலை நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தலைவராக ராஜேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை, நிருபர்களிடம் அளித்த பேட்டி:இலவசங்களை எதிர்ப்பதாக சொல்லும் பா.ஜ., கட்சி, டில்லி தேர்தலில் இலவசங்களை வாரி வழங்குவது சரியா என்று கேட்கிறீர்கள். நான் தமிழகத்திற்கு தான் தலைவர்; மராட்டியத்தில் என்ன நடக்கிறது. மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் இருக்கிறது. இதை கட்டி முடிக்க பல ஆண்டுகளாகும். மூன்று லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் என்றால், 60,000 கோடி, 70,000 கோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். ஓட்டு அரசியலுக்காக வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்.தமிழகத்தில் திராவிட ஆட்சியால் தான் அருந்ததியர் மக்கள் மருத்துவ படிப்பில் அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது தான் அருந்ததிய சமுதாய மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி கொடுத்து படிக்க சொல்வதாக சொல்லி கொள்கின்றனர். தற்போது தி.மு.க., ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. முந்தைய ஐந்து ஆட்சிகளில் என்ன செய்தார்கள்? இன்றைக்கும் பட்டியல் சமுதாயம் கல்வியில் பின்தங்கித்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.