டி.டி.எச்., இணைப்பு, சன் குழுமத்தின் கேபிள் அடாவடி :வசூல் குறித்து உளவு பிரிவு விசாரணை
தமிழகத்தில், கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களிடம், சன் குழுமம் அடாவடி வசூல் செய்வது, டி.டி.எச்., இணைப்பு போன்றவைகள் குறித்து, உளவுப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழகத்தில், கேபிள் கட்டணத்தை குறைப்பதற்காக, அரசு கேபிள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கேபிள், 'டிவி' இணைப்பு பெற்றுள்ளோர் எத்தனை பேர், மாதந்தோறும் எவ்வளவு கட்டணம் செலுத்துகின்றனர், எத்தனை கேபிள் ஆபரேட்டர்கள், கன்ட்ரோல் அறைகள் உள்ளன, கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், சன் குழுமத்திற்கு எவ்வளவு செலுத்துகின்றனர். மற்ற டி.டி.எச்., இணைப்பும் மக்கள் பெற்றுள்ளனரா, இதில் எந்த டி.டி.எச்., இணைப்பை மக்கள் அதிகம் பெற்றுள்ளனர் போன்ற தகவல்கள் குறித்து விசாரித்துள்ளனர். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில், சன் டி.டி.எச்., 65 ஆயிரம் இணைப்பும், மற்றவைகள் ஐந்தாயிரத்திற்குள்ளும் இருப்பது தெரிய வந்துள்ளது. 2.5 லட்சம் கேபிள் இணைப்பு உள்ளதாகவும், மக்களிடம் அதிகபட்சமாக, 180 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து, அதில் பெரும்பாலான தொகையை சன் குழுமத்திற்கு, அச்சத்துடன் கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள் வழங்குவதும் தெரிந்தது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். கேபிள், 'டிவி' ஆபரேட்டர்களிடம், கட்டண சேனல்களுக்காக, ஒரு இணைப்பிற்கு, 105 ரூபாய் வரை வசூல் செய்தனர். ஒரு கட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை குறைவாக கூறுகின்றனர் எனக் கூறி, ஆகாஷ் நிறுவனத்தினர், மின் இணைப்பு எத்தனை உள்ளது என கணக்கெடுத்தனர். மின் இணைப்பு பெற்றவர்களில், 75 சதவீதம் கேபிள் இணைப்பு இருக்கும் என கூறி, கேபிள் ஆபரேட்டர்களிடம், 'நீங்கள் சன் சேனல்கள் இணைப்பு பெற்றதில், பாக்கி 15 முதல், 20 லட்ச ரூபாய் வரை தர வேண்டும்' என மிரட்டி, பணத்திற்காக கேபிள், 'டிவி' கன்ட்ரோல் அறையை கைப்பற்றியுள் ளனர். இதுகுறித்தும் உளவுப் பிரிவு, அறிக்கை தயாரித்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -