உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அவலாஞ்சியில் கொட்டியது 19.2 செ.மீ., மழை ஒரே வாரத்தில் 180 மரங்கள் விழுந்து பாதிப்பு

அவலாஞ்சியில் கொட்டியது 19.2 செ.மீ., மழை ஒரே வாரத்தில் 180 மரங்கள் விழுந்து பாதிப்பு

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக கனமழையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் சூறாவளி காற்றும் வீசுகிறது. இதில், இதுவரை, 180க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், ஊட்டி, குந்தா தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாமல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊட்டி மற்றும் குந்தா தாலுகா பகுதிகள் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார்.ஊட்டியில், குளிச்சோலை, ஜல்லிகுழி, பிங்கர்போஸ்ட், மஞ்சூர், அவலாஞ்சி, இத்தலார் பகுதிகளில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடங்களில் 'பவர்ஷா' இயந்திரம் உதவியுடன் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். மழையால் குளிர் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை, முழு கொள்ளளவான, 89 அடியை எட்டியது. இந்த அணை, ஏற்கனவே இரு முறை திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, குந்தா அணைக்கு வினாடிக்கு, 400 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு. இரு மதகுகளில், வினாடிக்கு, 200 கன அடி வீதம், 400 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில நாட்களில், அணை மூன்றாவது முறையாக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி அவலாஞ்சியில், 19.2 செ.மீ., அப்பர்பவானியில், 10.2 செ.மீ., குந்தா, 6.7 செ.மீ., எமரால்டில், 5.8 செ. மீ., மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கியுள்ளன. மழைக்கு நடுவே சீரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை