தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; சாலையோரம் மண்சரிவு ஏற்படும் அபாயம்
கூடலுார்;கூடலுார் அரசு கல்லுாரியில் இருந்து வெளியேறும் மழை நீரால், தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் சாலையோரம் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் கோழிப்பாலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இருந்து, வெளியேறும் மழை நீரின் ஒரு பகுதி, தனியார் தேயிலை தோட்டம் வழியாக, பாண்டியாறு -- புன்னம்புழா ஆற்றுக்கு செல்கிறது.மழைநீர் வழிந்தோட சரியான வடிகால் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக, தேயிலை தோட்டத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, 20 அடி அகலம்; 50 அடி நீளத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம், ஆண்டு தோறும் பருவ மழையின் போது பெரிதாகி வருகிறது.கடந்த வாரம் பெய்த கோடை மழையின் போது இப்பகுதியில், மண்ணரிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு சாலையில் மண் குவிந்ததால், நள்ளிரவில் தமிழகம் - கேரளா-கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோடை மழை தொடர்ந்து அடுத்த வாரம் பருவமழை துவங்க உள்ளது. அப்போது, இவ்வழியாக வெளியேறும் மழைநீரில், மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளத்தின் பாதிப்பு அதிகரிப்பதுடன், கோழிக்கோடு சாலையோரத்தில் மண்சரிவு அபாயம் உருவாகி வருகிறது.வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழை நீர் வழிந்தோட, வடிகால் அமைத்து, ஏற்கனவே ஏற்பட்ட பள்ளத்தில் மீண்டும் மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். இல்லையெனில், மண்ணரிப்பால் அடிக்கடி சாலையில் மண் குவிந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையோரம் மண் சரிவு அபாயமும் ஏற்படும்,' என்றனர்.