| ADDED : மே 29, 2024 10:17 PM
குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், ஜூன் மாதம் நடப்பாணடுக்கான பயிற்சி துவங்க உள்ளது. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாடு பயிற்சி அதிகாரிகள் இங்கு வருகின்றனர். அவர்களின் வீட்டு பொருட்கள் கன்டெய்னர் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த பகுதிக்கு வந்த கன்டெய்னர் லாரி 'ஆப்பிள்பி' சாலை வழியாக சென்றுள்ளது. அதில், அங்கிருந்து இரு மின்கம்பங்கள் நகராட்சி குடிநீர் தொட்டியின் செட் ஆகியவற்றை இடித்து சேதப்படுத்தி சென்றுள்ளது. இதனால் இப்பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.தகவலின் பேரில் மின்வாரியத்துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில், ''பலரும் கூகுள் மேப் பயன்படுத்தி வரும்போது சில வாகனங்கள் ஆப்பிள்பி வழியாக வந்து சிக்கி கொள்கிறது. இந்நிலையில் ராணுவ பகுதிக்கு வந்த கன்டெய்னர் லாரி மூலம் மின்கம்பங்களை சேதப்படுத்தியது. வரும் நாட்களில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, வாகனங்கள் சரியாக செல்ல வழிகாட்டி பலகைகளை வைக்க வேண்டும்,'' என்றனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த,'சிசிடிவி' காட்சிகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.