சாலைகளில் கால்நடைகள் மறியல் நகரில் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி:ஊட்டி சாலைகளில் நாள்தோறும் உலாவரும் குதிரை, மாடு மற்றும் கால்நடைகளால், வாகனங்கள் இயக்குவதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது.ஊட்டி முக்கிய சுற்றுலா நகரமாக உள்ளதால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. தவிர, உள்ளூர் மக்களின் நடமாட்டமும், அதிகளவில் இருந்து வருகிறது. நகர பகுதியில் போதிய 'பார்க்கிங்' பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக உள்ளதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். கோடை சீசன் நாட்களில், அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கமர்ஷியல் சாலைகளில் குதிரை, மாடு உட்பட, கால்நடைகள் உலா வருவது தொடர்கிறது. இவை, பெரும்பாலான நேரங்களில், சாலையில் படுத்து விடுவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், 'சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நகராட்சி பணியாளர்களால் பிடித்து, 'பவுண்ட்' களில் அடைக்கப்படும், கால்நடைகளை திரும்ப பெறுவதற்கு, 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை திரும்ப பெறுவதற்கு தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும், பராமரிப்பு தொகையாக, நாளொன்றுக்கு, 500 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். ஒரே கால்நடைகள், மூன்று முறைக்கு மேல் பிடிபட்டால், விலங்குகள் வதை தடுப்பு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்,' என தெரிவித்துள்ளது.இருப்பினும், சாலைகளில் குதிரை உட்பட, கால்நடைகளின் நடமாட்டம் தொடருகிறது. இதனால், வாகன இயக்கத்திற்கு இடையூறு அதிகரித்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் வெறும் அறிவிப்புகளை மட்டும் விடுக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.