உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தரம் அறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நுகர்வோருக்கு அழைப்பு; சட்ட பயிற்சி கூட்டத்தில் அறிவுரை

தரம் அறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நுகர்வோருக்கு அழைப்பு; சட்ட பயிற்சி கூட்டத்தில் அறிவுரை

குன்னுார் : குன்னுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மாநில அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பயிற்சி நடந்தது.நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன் பேசுகையில், ''குடும்பங்களை வழிநடத்து மகளிருக்கு நுகர்வோர் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பொருட்களை வாங்கும்போது, ஏற்படும் பொருள் பாதிப்பு மட்டுமின்றி மனதளவு பாதிப்புக்கும் நிவாரணம் பெற சட்டத்தில் இடம் உள்ளது,'' என்றார்.கூடலுார் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''நுகர்வுக்காக, தேவையில்லாத பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி பொருட்களின் தரம் மற்றும் உபயோகங்களை அறிந்து பொருட்களை வாங்குவது அவசியம். ரேஷன் கடைகளில் வழங்கும் ஊட்டச்சத்து சேர்த்து செரிவூட்டப்பட்ட உணவுகளான அரிசி, பாமாயில், அயோடின் உப்பு போன்றவை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.குன்னுார் லஞ்சம் இல்லா நீலகிரி ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில்,''சினிமா, டி.வி., சீரியல், போலி விளம்பரங்களால், மகளிர் உட்பட மக்கள், நுகர்வு வலையில் சிக்க வைக்கப்படுகின்றனர். இதனால், கடனில் மூழ்கி நிம்மதி இழக்கின்றனர். நமது பாரம்பரிய உணவு கலாசாரத்தை மறந்து விட்டதால், ஒரு தலைமுறையே நோயாளி தலைமுறையாக மாறியுள்ளது. வாக்குரிமையும், விலைக்கு விற்கும் நிலை, நுகர்வு கலாசாரத்தின் உச்சம். இனியும் விழிப்புணர்வு இல்லையெனில், அடுத்த தலைமுறை எதிர்காலம் கேள்விக்குறியாகும்,'' என்றார்.கோத்தகிரி புளூ மவுண்டன் சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ''நுகர்வோர் பாதிப்பு தவிர்க்க, எடை, அளவு, தரம், தயாரிப்பாளர் பெயர், காலாவதி தேதி ஆகியவை பார்த்து, பில்லுடன் பொருள் வாங்கும் விழிப்புணர்வு அவசியம். எழுத்துபூர்வ புகாருடன், நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெறலாம்,'' என்றார்.குன்னுார் வட்ட வழங்கல் அலுவலர் துரைசாமி, கோத்தகிரி புளுமவுண்டன் சங்க செயலாளர் முகமது சலீம், மாவட்ட வழங்கல் அலுவலக வருவாய் ஆய்வாளர் பூங்கோதை, பொறியாளர் எபினேசர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை