ஊட்டி;நீலகிரியில், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வரும் மழையால், எம்.பாலாடா சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் மலை காய்கறிகள் நீரில் மூழ்கியது.நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குந்தா, ஊட்டி, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மாவட்ட முழுவதும் சராசரியாக, 70 செ.மீ., மழை பெய்துள்ளது.பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருவாய், நெடுஞ்சாலை, தீயணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய பயிர்கள்
இந்நிலையில், ஊட்டி அருகே எம்.பாலாடா சுற்றுவட்டார பகுதிகளான கப்பதொரை, கக்கன்ஜி காலனி, மேல் கவ்வட்டி, கீழ் கவ்வட்டி, குருத்துகுளி, கல்லக்கொரை ஹாடா, இத்தலார், போர்த்தி, எமரால்டு, கோத்தக்கண்டி மட்டம் பகுதிகளில் பல ஏக்கரில் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பலஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.அறுவடைக்கு தயாரான பயிர்களை விவசாயிகள் அவசர, அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். அறுவடைக்கு தயாராக, இன்னும் ஒரு மாதம் காலம் உள்ள பயிர்கள் மற்றும் விதைப்பு பணி செய்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 'தோட்டக்கலை துறையினர் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என, அவர் வலியுறுத்தி உள்ளனர். வலுவிழந்த மரங்களை அகற்றணும்
ஊட்டி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி மற்றும் குன்னுார் பகுதிகளில் உள்ள பிரதான சாலையோரங்களில் ஏராளமான நுாறாண்டு பழமை வாய்ந்த கற்பூரம், சீகை, காட்டு மரங்கள் வலுவிழந்த நிலையில் உள்ளன.பருவ மழையில் போது வீசும் பலத்த காற்றுக்கு மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று, ஊட்டி - முள்ளிக்கொரை பிரதான சாலையில் அடுத்தடுத்து வலுவிழந்த பழமையான மரங்கள் பலத்த காற்றுக்கு விழுந்தது. மரங்களுக்கு இடையே ஆம்புலன்ஸ், வாகனங்கள் சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினர் அங்கு வந்து 'பவர்ஷா' உதவியுடன் மரத்தை அகற்றிய பின், இரண்டு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.மக்கள் கூறுகையில்,'மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலை, வருவாய் மற்றும் வனத்துறையை ஒருங்கிணைத்து மாவட்ட முழுவதும் வலுவிழந்த மரங்களை குறித்து கணக்கெடுப்பு நடத்தி அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.அமைச்சர் ராமசந்திரன் கூறுகையில், '' மாவட்ட முழுவதும் இது வரை, 40 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடிழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிகாரிகள் குழுவினர் ஒன்றிணைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்,'' என்றார்.
இரண்டாவது நாளாக திறப்பு...
நீலகிரியில் தொடரும் மழைக்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட, 12 அணைகள் மற்றும் 30 தடுப்பணைகளில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதில், குந்தா அணை முழு கொள்ளளவான, 89 அடியை எட்டியதால், இரண்டு நாட்களாக இரு மதகுகளில் வினாடிக்கு, 150 கன அடி வீதம், 300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அவலாஞ்சி அணையில், 171 அடிக்கு, 96 அடிவரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.