மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி, : ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி, ஊட்டியில் ஓட்டல் உரிமையாளரிடம், 54 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த, 45 வயது பெண் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதள செயலி மூலம் இவருக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, 'இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதலாகவும், இரட்டிப்பாகவும் வருமானம் கிடைக்கும்,' என்று ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதை நம்பிய அவர் முதலில் ஒரு லட்சம் முதலீடு செய்து, 2 லட்சம் ரூபாய் பெற்று கொண்டார். தொடர்ந்து, பணஆசை அதிகரித்ததால் அந்தப் பெண் பல்வேறு தவணைகளாக வங்கி கணக்கு மூலம், 54 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், இந்த முறை அவருக்கு கூடுதல் பணம் வரவில்லை. முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பணம் வாங்கியவர்களையும் அந்த பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் கூறுகையில், ''ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம், 54 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணம் மாற்றப்பட்ட வங்கிக்கு கடிதம் அனுப்பி வங்கி கணக்கில் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.
03-Oct-2025