முதுமலையில் யானைகள் தின விழா வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு உணவு
கூடலுார்;நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று மாலை, உலக யானைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக, வளர்ப்பு யானைகளை மாயாறு ஆற்றில் குளிக்க வைத்து, சந்தனம், குங்குமம் பூசி அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, யானைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன. பின், பாகன்கள் உத்தரவுக்கு இணங்க பயிற்சிகளை மேற்கொண்டன. வளர்ப்பு யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, முகாமில் வரிசையாக நிறுத்தி சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.வனச்சரகர்கள் பரத், சிவக்குமார், விஜய், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ், வனவர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.