| ADDED : ஜூன் 23, 2024 11:38 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே குடியிருப்பை யானைகள் சேதப்படுத்திய பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பந்தலுார் அருகே ஏலமன்னா குடியிருப்புகளை ஒட்டிய புல்வெளியில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொளப்புள்ளி செல்லும் சாலை வழியாக பன்னிக்கொல்லி கிராமத்திற்கு யானைகள் சென்றுள்ளது. அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்த யானைகள், இரவு, 11:00 மணிக்கு ரமேஷ் குமார் என்பவரின் வீட்டின் தண்ணீர் டாங்குகுளை இடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சைக்கிள் மற்றும் பொருட்களை சூறையாடி உள்ளன. தொடர்ந்து, வீட்டு சமையலறை சுவரை இடித்து யானைகள் உள்ளே செல்ல முயன்ற நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக் குழுவினர் அப்பகுதிக்கு வந்து யானைகளை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் விரட்டினர். நேற்று காலை சேரம்பாடி வனச்சரக உதவி வன பாதுகாவலர் அரவிந்த் அரசு, வனவர் முத்தமிழ், வனக்காப்பாளர் குணசேகரன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில்,'பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.