மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பாடந்துறை, குச்சிமுச்சி, செறுமுள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாடந்துறை, ஆலவயல், குச்சுமுச்சி ஆறுகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு, சாலைகள், விவசாய தோட்டங்களை சூழ்ந்தது.குச்சிமுச்சி சாலையில் உள்ள பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால், கல்லிங்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கம்மாத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களை சூழ்ந்தது. அங்குள்ள வீட்டில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொரப்பள்ளி, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இருவயல் கிராமத்தில் உள்ள வீடுகளில் சூழ்ந்தது. மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.கூடலுார் தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் அலுவலர்கள் கல்பனா, ரேகா, வி.ஏ.ஓ., நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்குள்ள, 10 வீடுகளில் சிக்கிய, 47 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்கப்பட்டு, தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மக்கள் கூறுகையில், 'ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், குடியிருப்பு, விவசாயிகள் தோட்டத்தை மூழ்கடித்து வருகிறது. அரசு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்குவதுடன், வரும் நாட்களில் ஆறுகளை முழுமையாக துார்வார வேண்டும்' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 15 வீரர்கள் வந்துள்ளனர்' என்றனர்.
03-Oct-2025