குன்னுார், : குன்னுார் குப்பை மேலாண்மை பூங்காவில், இயற்கை உரம் மூலம் துப்புரவு தொழிலாளர்களால் தயார்படுத்திய பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்குகிறது.குன்னுார் நகராட்சி, 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி மற்றும் கிளீன் குன்னுார் தன்னார்வ அமைப்பு மூலம், ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் அருகே உள்ள குப்பை மேலாண்மை பூங்காவில், தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும், இறைச்சி கழிவு உட்பட ஈரகழிவு மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குவிந்த குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசிய இந்த இடம், பொலிவு படுத்தப்பட்டு, அழகிய பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.அதில், மேரிகோல்டு, ஆஸ்டர், பெட்டூனியா, பிளாக்ஸ், டயான்தஸ், பேன்சி , கார்னேஷன், ரோஜா. டேலியா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கடந்த பிப்., மாதம் நடவு செய்யப்பட்டன.இங்கு தயாரான இயற்கை உரம் இந்த மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது சீசன் துவங்கிய நிலையில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இங்குள்ள மக்கள், உள்ளாட்சி அமைப்பினர். சுற்றுலா பயணிகள், அவ்வப்போது பார்வையிட்டு செல்கின்றனர்.கிளீன் குன்னுார் தலைவர் சமந்தா அயனா கூறுகையில், ''இறைச்சி உட்பட இயற்கை ஈர கழிவுகளில் தயாரிக்கும் உரத்தில், மண்ணுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா அதிகம் உள்ளது. நன்மை தரும் மண் சத்து நுண்கிருமிகள் மூலம் தாவர வளர்ச்சிக்கான என்சைம்கள் அதிகரித்து இந்த மலர்களில் வண்ணம் கூடுதலாகவும், வளர்ச்சி அதிகமாகவும் காணப்படுகிறது.இந்த பூக்கள் மே, 15ம் தேதி வரை இருக்கும்,'' என்றார். துர்நாற்றம் வீசும் இடத்தில், இங்கு பணியாற்றும் தூய்மை தொழிலாளர்களால் மலர் வாசம் வீசுகிறது.