கூடலுார்;முதுமலை, சிங்கார வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள, வனத்தீயை கட்டுப்படுத்த வன ஊழியர்கள் போராடி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை மழை ஏமாற்றியுள்ளதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தொடரும் வறட்சியினால் பல இடங்களில் வனத்தீ ஏற்பட்டு வனப்பகுதியும் பாதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், நீலகிரி வனக்கோட்டம் பெந்தட்டி வனப்பகுதியில், தீ ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்த வன ஊழியர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், வனத்தீ, முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே, கல்ஸ்கொம்பை வனப்பகுதியில் பரவியது.வனச்சரகர் ஜான்பீட்டர், தயானந்தன் உட்பட, 60 வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அப்பகுதி சரிவாக இருப்பதாலும், வெப்பத்தின் தாக்கம், காற்றின் வேகம் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் வன ஊழியர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேற்றும், வனத்தீ தொடர்ந்தது. இதனால், வன ஊழியர்கள் எதிர் தீ மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.வனத்துறையினர் கூறுகையில், 'சரிவான, அப்பகுதியில் புற்கள் காய்ந்து இருப்பதால், வனத்தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும், வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இன்று (நேற்று), இரவுக்குள் தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.