ஊட்டி : ஊட்டி மார்க்கெட்டில் 'பீன்ஸ்' வரத்து ஒரே நாளில், 5 டன் ஆக உயர்ந்துள்ளது.ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஊட்டியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல், சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் வரத்து 5 டன்
இந்நிலையில், நீலகிரியில் காலநிலை மாற்றம், வனவிலங்கு தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மலை காய்கறி விவசாயம் சுருங்கி வருகிறது. பருவம் தவறி பெய்யும் மழை பொழிவாலும் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.சராசரியாக, 20 டன் அளவிற்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக அனைத்து காய்கறிகளும் விலை 'கிடு கிடு' வென உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஊட்டியில் விளைவிக்கப்படும், 'பீன்ஸ்' வரத்து கடந்த மூன்று நாட்களாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 5,000 கிலோ பீன்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஊட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. பீன்சை தொழிலாளர்கள் தரம் பிரித்து பிற இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.