குன்னுாரில் மண் சரிவு ஊட்டி மலை ரயில் ரத்து
மேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மலைப்பகுதியில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து, 14வது கி.மீ., அடர்லி - ஹில்குரோ பகுதிகளுக்கு இடையே, மூன்று இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் ரயில் பாதையில் விழுந்துள்ளன.நேற்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ஸ்டேஷனிலிருந்து, 200 சுற்றுலா பயணியருடன், ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. கல்லாறு ஸ்டேஷன் சென்றதும், அங்கு ரயில் பாதையில் மண் சரிந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த, ரயில் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது. சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.பயணியருக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கி, ஊட்டி செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் பாதையில் மரங்கள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குன்னுாரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒரு வாரத்திற்கு ஊட்டி மலை ரயிலை ரத்து செய்ய, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.