உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒரு மாணவர் கூட வகுப்பில் சேரவில்லை தொடக்கப்பள்ளியை மூடுவதாக மக்கள் புகார்

ஒரு மாணவர் கூட வகுப்பில் சேரவில்லை தொடக்கப்பள்ளியை மூடுவதாக மக்கள் புகார்

அன்னூர், - ஒரு மாணவர் கூட சேராததால், முகாசி செம்சம்பட்டி தொடக்கப் பள்ளியை மூட,அதிகாரிகள் முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில், வடவள்ளி ஊராட்சி, முகாசி செம்சம்பட்டியில், 40 ஆண்டுகளாக, தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சில ஆண்டுகளாக குறைந்து வந்தது. கடந்த ஆண்டு இங்கு படித்த இரண்டு மாணவர்களும் வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். இந்த ஆண்டு ஒருவர் கூட பள்ளியில் சேரவில்லை. இதையடுத்து, மாணவர்களே இல்லாத பள்ளியாக இப்பள்ளி உள்ளது.இதுகுறித்து முகாசி செம்சம்பட்டி மக்கள் கூறியதாவது: இப்பள்ளியில் நிரந்தரமாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் நியமித்திருந்தால் அவர்கள் பள்ளி வயது குழந்தைகளை கணக்கெடுத்து, பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை சேர்த்திருப்பார்கள். இப்பள்ளியை மூட, கல்வித் துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். தற்போது இங்கு புதிய 'லே அவுட்கள்' அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் உருவாகிறது. வெளிமாவட்ட, வெளி மாநில தொழிலாளர்கள் குடியேறி வருகின்றனர். எனவே, இப்பள்ளியில் மாணவர்கள் சேருவார்கள். பள்ளியை மூடிவிட்டால் மீண்டும் துவக்குவது மிக கடினம்.இவ்வாறு பொது மக்கள் தெரிவித்தனர். அன்னூர் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ சுதா கூறுகையில், முகாசி செம்சம்பட்டி பள்ளியை மூடும் திட்டம் இல்லை. பள்ளியில் மாணவர்கள் இல்லை என்பதை மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிவித்துள்ளோம்.புதிதாக மாணவர்களை சேர்க்கும்படி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை