வாலிபரை கடத்திய வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார்
பாலக்காடு: கடன் வாங்கிய பணத்தை, திரும்ப பெறுவதற்காக, வாலிபரை கடத்திச்சென்ற வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி எழுவந்தலை என்ற இடத்தைச்சேர்ந்தவர் முகமது முஸ்தபா, 43. இவரை கடந்த 25ம் தேதி இரவு, 11:30 மணிக்கு போனில் அழைத்து, வீட்டின் வெளியே வந்தவரை இருவர் காரில் கடத்திச்சென்றனர்.தொடர்ந்து சில மணி நேரத்தில், கடன் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் திரும்ப தந்தால் மட்டுமே, முகமது முஸ்தபாவை விடுவிப்போம் என்று, கடத்தியவர்கள், அவரது மனைவியை போனில் அழைத்து மிரட்டினர். இதுகுறித்து, போலீசாரிடம் தெரிவித்தால், பின்விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல், உறவினர்கள் செர்ப்புளச்சேரி போலீசாரிடம் புகார் அளித்தனர். எஸ்.ஐ., அருணின் தலைமையிலான போலீஸ் படையினர் நடத்திய விசாரணையில், கடன் தொகை திரும்ப பெற முகமது முஸ்தபாவை கடத்தி உள்ளதும், கடத்தியது மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரியைச்சேர்ந்த முகமது ஜலீல், 36, உதவியாளர் வெளிமாநில தொழிலாளியான நஜ்முல் ஹக், 20, ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், அந்த பகுதியை சுற்றி வளைத்து இவர்களை கைது செய்தனர். சிறை பிடித்து வைத்திருந்த முகமது முஸ்தபாவை மீட்டனர். கைது செய்தவர்களை ஒற்றைப்பாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.