அமைச்சர் பதவி விலக கோரி போராட்டம்: காங்., கட்சியினர் போலீசார் மோதல்
பாலக்காடு;பாலக்காடு கலெக்டர் அலுவலகம் முன் 'பார்' லஞ்ச வழக்கில் கலால் துறை அமைச்சர் ராஜேஷ் பதவி விலகக் கோரி, காங்., இளைஞரணி நடத்திய முற்றுகை போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது.கேரள மாநிலத்தில், 'பார் லைசன்ஸ்' வழங்குவதில் லஞ்சம் வாங்கிய வழக்கில், கலால் துறை அமைச்சர் ராஜேஷ் பதவி விலக கோரி, காங்., கட்சியின் இளைஞர் அணியின் மாவட்ட கமிட்டி சார்பில், பாலக்காடு கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை 11:00 மணிக்கு முற்றுகை போராட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த அமைக்கப்பட்ட தடுப்புகளை தாண்ட முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மூன்று சுற்று தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தடுப்புகளை கடக்க முயன்ற காங்., கட்சியினரை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி போது, கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தவர்களை கைது செய்து, கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முற்றுகைப் போராட்டத்தை காங்., இளைஞர் அணியின் மாநில தலைவர் ராகுல் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஜெயகோஷ் தலைமை வகித்தார்.இதுகுறித்து, மாநில தலைவர் ராகுல் கூறுகையில், ''எந்தவித அசம்பாவிதமும் நடக்காத நிலையில், போலீசார் மோதலை உருவாக்கினர். லஞ்சம் வாங்கி உலகம் சுற்றும் அமைச்சர் ராஜேஷ், ஊருக்குள் வரவிடாமல் கடுமையான ஆர்ப்பாட்டம் நடத்துவோம்,'' என்றார்.