கர்ப்பிணி பெண்களுக்கு மனநல ஆலோசனை
கூடலுார், : கூடலுார் நகர சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு உடல் மற்றும் மனநல ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, 'ஆல் தி சில்ரன்ஸ்' ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார்.சுகாதார மைய டாக்டர் அன்பு துவக்கி வைத்து பேசுகையில்,''கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுக்க உடல் மற்றும் மனநலம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்,'' என்றார்.பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா பேசுகையில், ''கருவறையில், குழந்தையின் வளர்ச்சி தாயின் மனநிலையை பொறுத்து உள்ளது. எனவே, கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதுடன் காலை, மாலை தியான பயிற்சி செய்து மனதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவசுப்ரமணியம் பேசுகையில்,''கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு ஆரோக்கியமான உணவுகள், கீரை, சிறுதானியம், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.