மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
அன்னுார் : அன்னுார் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை, அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அன்னுாரில் பெய்த மழையால், நகர் பகுதி அருகே உள்ள, கோவன் குளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் அன்னுார் பேரூராட்சி ஐந்தாவது வார்டு புவனேஸ்வரி நகரில், தேங்கியதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளை சுற்றியும் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் சிரமப்பட்டனர். எனவே மழை நீரை அகற்றக்கோரி, நேற்று காலை, 10:45 மணிக்கு அன்னுார்-சத்தி சாலையில், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி, அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில்,'மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து தேங்கி உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது உடன், கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என, கூறினர். பேரூராட்சி அதிகாரிகள் மழை நீரை வெளியேற்ற உறுதி அளித்ததையடுத்து, மதியம், 12:00 மணிக்கு பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அன்னுார்-சத்தியமங்கலம் செல்லும் அனைத்து வாகனங்களையும், ஓதிமலை சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. பேரூராட்சி அதிகாரிகள் மின்மோட்டார் வைத்து, மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
03-Oct-2025