சாலையோரம் குப்பை கழிவுகள் அகற்றிய துாய்மை பணியாளர்கள்
கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் சாலையோரம் குவிந்த குப்பை கழிவுகளை துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.கோத்தகிரி-ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டப்பட்டு பஜார் பகுதி, நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஆகிய ஊராட்சிகளின் எல்லையாக உள்ளது.இங்கு, வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வி.ஏ.ஓ., அலுவலகம், இன்கோ தேயிலை தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மேலும், சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இவ்வழியாக சென்று வருகின்றனர். இதனால், இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகள், சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு குவிந்து காணப்படுகிறது.இந்நிலையில், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், நிரந்தர மற்றும் தற்காலிக துாய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டன.அதிகாரிகள் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, மக்கள் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.