| ADDED : ஜூலை 06, 2024 01:47 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் பெள்ளாதி ஊராட்சி சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மூலமந்திர ஹோமவிதாந லட்சார்ச்சனையும், திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று முன் தினம் காலை விநாயகர் வழிபாடு, கோ பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம் பூஜை, கலசாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கோவில் வளர்ச்சிக்காகவும் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை மூல மந்திர மகா யாகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சீர்வரிசை தட்டுகளை கோவிலுக்குச் கொண்டு வந்தனர். மதியம் நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமாங்கல்யம் அணிவித்த பின், சுவாமிகளுக்கு பால், பழம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் பூப்பந்து, தேங்காய் ஆகியவற்றை உருட்டி விளையாடினர். அதை தொடர்ந்து மகாதீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சார்ச்சனை, திருக்கல்யாணம் வைபவத்தை, சிவகிரி கண்ணன் சுவாமியின் தலைமையில், 15 அர்ச்சர்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.