| ADDED : ஜூலை 31, 2024 11:59 PM
ஊட்டி : ஊட்டி வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி.,மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைபடை சார்பில், புலிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமை ஆசிரியர் குமரன், புலிகள் காப்பகத்தின் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆங்கில வழி கல்வி தலைமை ஆசிரியை நந்தினி, 'இயற்கை பாதுகாப்பிற்கு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் தேவையான செயல் வடிவங்கள், நீண்ட காலமாக பள்ளியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,' என்றார்.தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசியதாவது:காடுகளில் புலிகள் வாழ்வதன் அறிவியல் பூர்வமான உண்மைகளை பொதுமக்களிடம் மாணவர்கள் எடுத்து செல்லவேண்டும். எதிர்காலத்தில், வனங்களை பாதுகாப்பதில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மாணவர்கள் மூலமாக, நாடு பெறவேண்டியது அவசியமாக உள்ளது. வனங்கள் குறித்து, அறிவியல் பூர்வமான அறிவு மாணவர்களின் செயல்பாடுகளில் மட்டுமே உள்ளது. புலிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு, பல ஆண்டுகளின் தொடர் போராட்டமும், கண்காணிப்பும் காரணமாக உள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் உணவு தேவைக்கும் இயற்கை வளம் முக்கியமானது. இயற்கை வளங்களை பாதுகாப்பதில், புலிகள்தான் ஆதார விலங்கு என்பதை அனைவரும் உணர வேண்டும். புலிகளை பாதுகாப்பதன் மூலம், மனிதர்களின் வாழ்வில் வளமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, புலிகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு, ஓரங்க நாடகம் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியை சாரதா நன்றி கூறினார்.