பல்வேறு பறவைகளின் வாழ்விடமாக மாறிய சிம்ஸ் பூங்கா சுற்றுலா பயணிகள் வியப்பு
குன்னுார்,; குன்னுார் சிம்ஸ்பூங்கா, 50க்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.நம் மாநிலத்தில், மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில், பசுமை மாறா மற்றும் இலையுதிர் காடுகள் அதிகம் காணப்படுகிறது. அவற்றில் பல வகை பறவைகள் காணப்படுகின்றன. அதில், குன்னுார் சிம்ஸ்பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா, கரிக்கையூர், காட்டேரி, ரன்னிமேடு உள்ளிட்ட பல இடங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக மாறி வருகிறது. இவற்றை அறிந்த பறவை ஆர்வலர்கள், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நீலகிரிக்கு வந்து, புகைப்படம் எடுத்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், குன்னுார் சிம்ஸ்பூங்காவில் உள்ள பல வகையான மரங்களை வாழ்விடமாக கொண்ட பறவைகளை 'போட்டோ' எடுக்க தற்போது, 'வைல்ட் லைப் போட்டோகிராபர்கள்' அதிகளவில் வருகை தருகின்றனர். குளிர் காலங்களில் இடப்பெயர்ச்சி
ஓங்கில் இயற்கை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், ஆசாத் கூறுகையில், ''நீலகிரியில் உள்ள 'வெர்னல் ஹாங்கிங் பேரட்; இந்தியன் ஸ்கிமிடர் பபிளர்; ஸ்ட்ரீக் திரோட்டட் வுட் பீக்கர்; ஆரஞ்ச் ஹெட்டட் திரஷ்; காமன் எமரால்டு டவ்; பிரவுன் கேப்ட் பிக்மி வுட் பீக்கர்; நீலகிரி திரஷ்; புளூ பார்டர் பீ ஈட்டர்; பிரவுன் பிஷ் அவுல், 'உள்ளிட்ட பல பறவைகளின் வாழ்விடமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. மேலும், இமயமலை உட்பட வட மாநில பகுதிகளில் இருந்து குளிர் காலங்களில், இடம் பெயரும் பறவைகள், நீலகிரி மலை தொடர்களுக்கு வருகின்றன. இதில், 'ஒயர் டைல்ட்; ஸ்வாளோ; காஷ்மீர் பிளை கேச்சர்; ரோஸ் பின்ச்; வெர்டைட்டர் பிளை கேச்சர்,' உள்ளிட்டவை, இங்கு வந்து செல்கிறது. சில பறவைகள், அக்., நவ., மாதங்களில் இங்கு வந்து, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சென்று விடும். இங்கு ஆய்வுக்கு வருபவர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் அரசு சலுகைகள் வழங்க வேண்டும்,'' என்றார். கூடு கட்டி வாழும் பறவை
பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில், ''பொதுவாக வனங்கள் சூழ்ந்த இடங்கள் பறவைகள் வாழ்விடமாக இருக்கும். இந்நிலையில், ஆண்டுக்கு, 6 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தரும் சிம்ஸ் பூங்காவில், உள்ள பல வகையான மரங்களும், இயற்கை சூழலும், பறவைகளின் புகலிடமாக மாறி உள்ளது. குறிப்பாக, 'பிரவுன் பிஷ் அவுல்' எனப்படும் பறவை இங்கே கூடு கட்டி வாழ்கிறது. கல்யாண முருங்கை மரத்தில் உள்ள மலர் மொட்டுகளில் உள்ள தண்ணீரை குடிக்க 'ஹம்மிங்' பறவை வருகிறது. இந்த பூங்கா, 50 க்கும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வருகின்றன. சுற்றுலா பயணிகளுக்கு மரங்கள், மலர்கள் மட்டுமில்லாமல் பறவைகளையும் காணும் அரிய இடமாக மாறி வருகிறது. இவற்றை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்,'' என்றார்.