அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள்: விசாரணை அவசியம்
மஞ்சூர், ; 'குந்தா -முக்கிமலை சாலையோரத்தில், வருவாய்த்துறை இடத்தில் கற்பூர மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சியில், முக்கிமலை கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் உள்ளது. இங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்களால் கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டன. 'கடந்த ஜன., மாதம் இப்பகுதியில் உள்ள கற்பூர மரங்களின் கிளைகள் மட்டுமல்லாமல், மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டு வந்ததால், ஆய்வு செய்து தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் புகார் மனுக்கள் அனுப்பினர். மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுக்கப்பட்டது.முக்கிமலையை சேர்ந்த சுகுமாரன் கூறுகையில், ''விதிமுறைகளை மீறி சட்டத்துக்கு புறம்பாக சாலையோர மரங்களுடன், சோலையின் உட்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வந்ததை தடுக்க புகார்கள் கொடுத்தும் தீர்வு இல்லை. இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, ஒப்பந்ததாரர் மீது, அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.