உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ள காடாக மாறிய கிராமங்கள்

பந்தலுாரில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ள காடாக மாறிய கிராமங்கள்

பந்தலுார்;பந்தலுாரில் நேற்று மதியம் முதல் இரவு வரை கொட்டி தீர்த்த கனமழையால், சுற்றுப்புற கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.நேற்று மதியம் இரண்டு மணிக்கு மேல் கனமழை பெய்ய துவங்கி, இரவு வரை தொடர்ந்ததால், சுற்றுவட்டார பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறின.

போக்குவரத்து துண்டிப்பு

பந்தலுார் ஹட்டி செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், வாகன ஓட்டுனர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி மழை குறைந்த பின் சென்றனர். செம்மண்வயல் என்ற இடத்தில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.அதில், 10 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், பொருட்கள் சேதம் அடைந்ததுடன் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். பணிக்கு சென்று திரும்பிய தொழிலாளர்கள் இப்பகுதி சாலையில் சூழ்ந்த மழை வெள்ளத்தில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதேபோல, கூடலுார் புளியாம்பாறை சாலையை மழை வெள்ளம் மூழ்கடித்தால், மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை கயிறுகட்டி மறு பகுதிக்கு அங்குள்ள மக்கள் அழைத்து சென்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளை, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பார்வையிட்டு, மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர். வருவாய் துறையினர் கூறுகையில்,'இப்பகுதியல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று (நேற்று) காலை முதல், மாலை, 4:00 மணிவரை, 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இரவிலும் தொடர்வதால், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும்,' என்றனர்.

மண் சரிவில் சிக்கி கவிழ்ந்த கார்...

பந்தலுாரில் அத்திக்குன்னா வழியாக கூடலுார் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மறந்தாளுனர் நிஷா, அவரது மகன் ஜோஸ், நண்பர் ஆல்வின் ஆகியோர் காரில் வந்தனர். அப்போது, ஏற்பட்ட மண் சரிவில் கார் தேயிலை தோட்டத்திற்குள் இழுத்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் காயங்களுடன் உயிர்தப்பினர். இவர்களை கவுன்சிலர் ஆலன் மற்றும் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ