யானைகள் கிராமத்துக்கு விசிட் மக்களுக்கு விழிப்புணர்வு
பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் யானைகள் இரவில் வருவதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சந்தக்குன்னு, மானிவயல், காமராஜ் நகர், பிதர்காடு, நெலக்கோட்டை, விளங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு, 7:00 மணிக்கு மேல் யானைகள் உலா வருகின்றன. இவைகள், விவசாய விளை பயிர்களை சேதம் செய்து, பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் வனத்துறை சார்பில் கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சந்தக்குன்னு மற்றும் மானிவயல் பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனசரகர் ரவி பேசியதாவது: யானைகள் வந்து செல்லும் பாதைகளில் தனியார் தோட்ட உரிமையாளர்கள், சோலார் மின் வேலிகள் அமைத்துள்ளதால், யானைகள் வேறு வழி இன்றி மக்கள் நடந்து செல்லும் சாலை மற்றும் நடைபாதைகளை பயன்படுத்தி வருகின்றன. இது போன்ற நேரங்களில் விவசாய பயிர்கள் எளிதில் உணவாக கிடைப்பதால், அவற்றை உட்கொண்டு பின்னர் அதையே வழக்கமாக்கி கிராமங்களுக்குள் வந்து செல்கிறது. எனவே, பொதுமக்கள் யானைகள் கிராமத்திற்குள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடந்து செல்வதை தவிர்க்கவும் வேண்டும். மேலும் யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதாக இருந்தால் வாகனங்களிலும், கையில் போதிய வெளிச்சங்களை வைத்து கொண்டும் செல்ல வேண்டும் இவ்வாறு ரவி பேசினார். வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.