உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் மினி பஸ் இயக்கத்துக்காக... 101 அரசு பஸ்கள் நிறுத்தம்!அவற்றை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

நீலகிரியில் மினி பஸ் இயக்கத்துக்காக... 101 அரசு பஸ்கள் நிறுத்தம்!அவற்றை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

குன்னுார்;'நீலகிரியில் மினி பஸ்களுக்காக நிறுத்தப்பட்ட, 101 வழித்தடங்களில், அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 2000ம் ஆண்டில் மினி பஸ்கள் கொண்டு வரப்பட்ட போது, 101 வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. சமவெளியை போன்று, இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்படாத சூழ்நிலையில், நகர பகுதியில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட, 101 வழித்தடங்களுக்கான பெரும்பாலான மினிபஸ்கள் பல்வேறு காரணங்களால் தற்போது இயக்கப்படுவதில்லை. இயக்கப்படும் சில பஸ்களிலும், கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

சிரமப்படும் மாணவர்கள்

அரசு பஸ்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில், 40 ஆயிரம் மாணவ மாணவியர் கூட்ட நெரிசலில் பயணம் செய்வது தொடர்கிறது. சமவெளிப் பகுதிகளில், 40 கி.மீ., துாரம் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்திய நிலையில், நீலகிரியில், 35 கி.மீ., துாரத்துக்கான, மகளிர் இலவச பயண திட்டம் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில், 90க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை செயல்படுத்திய போதும், குன்னுார்- ஊட்டி உள்ளிட்ட சில வழித்தடங்களில் பஸ்கள் குறைவாகவே இயக்கப்படுகிறது.இத்தகைய பிரச்னைகள் குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற்றுள்ள, குன்னுார் லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:

கட்டணம் அதிகம்

குன்னுாரில் இருந்து சோகத்தொரை கிராமத்திற்கு, 4 மினி பஸ்கள், 24 'சிங்கிள் டிரிப்' இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. குன்னுார் மற்றும் எல்லநள்ளி பகுதிகளில் இருந்து தேனலை கிராமத்திற்கு இயக்கப்பட்ட மினி பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. குன்னுாரில், 35 மினி பஸ்கள், 7 இடங்களில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' அதிக கட்டணம் வசூலிப்பதை போன்று, மினி பஸ்களிலும், தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தி உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.மாவட்டத்தின் நகர பகுதிகளில் இயக்கப்படும் மினி பஸ்களில் ஒரு கி.மீ., துாரத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 9.2 கி.மீ., துாரம் கொண்ட சோகத்தொரை கிராமத்திற்கு அரசு பஸ்சில்,8 ரூபாய் என வசூலிக்க வேண்டிய நிலையில், மினி பஸ்க்களில், 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, 6 கி.மீ.,துாரம் கொண்ட ஜெகதளாவிற்கு, 12 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் மினி பஸ்களை அறிமுகம் செய்தபோது நிறுத்தப்பட்ட, 101 வழித்தடங்களுக்கான அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.இவ்வாறு மனோகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ