ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் விவசாய இயந்திரங்கள் மற்றும் இடுபொருட்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
ஊட்டி : 'மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில், 183 விவசாயிகளுக்கு, 1.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மானிய விலையில் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிப்பது தொடர்பான, மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான முகாம் நடந்தது.முகாமை துவக்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நான்கு விவசாயிகளுக்கு, மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை வழங்கினார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பல்வேறு இயந்திரங்கள் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, மானிய விலையில் இயந்திரங்கள் வழங்கப்பட்டு, அவர்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் இவைகளை பயன்படுத்தும் போது, சிறு பழுதுகள் ஏற்பட்டால், அதனை விவசாயிகளே சரி செய்து கொள்ளும்வகையில், பராமரிப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில், 183 விவசாயிகளுக்கு, 1.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மானிய விலையில் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற விவசாய முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.முகாமில், விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுது நீக்கம் செய்து தரப்பட்டது.