ஊட்டியில் கைத்தறி பொருட்கள் கண்காட்சி 20 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு
ஊட்டி; ஊட்டியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. ஊட்டி பழங்குடியின பண்பாட்டு மையத்தில், 11வது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு கைத்தறி விற்பனை கண்காட்சியினை கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று திறந்து வைத்தார். கைத்தறி துறை சார்பில் பண்பாட்டு மைய கட்டடத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. கண்காட்சியில் கைத்தறி பட்டுசேலைகள், பருத்தி சேலைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள் மற்றும் 'தோடர் எம்பிராய்டரி' ரகங்களுடன், கோ-ஆப்டெக்சில் விற்பனை மேற்கொள்ளும் ஜவுளி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் கூடிய விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், தோடர் எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் கடந்த மிதியாண்டில் அதிக அளவு எம்பிராய்டரி ரகங்களை உற்பத்தி செய்த முதல் மூன்று சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன், கைத்தறி அலுவலர் பொம்மையா சாமி, கைத்தறி ஆய்வாளர் முகமது ஷாருக்கான், கைத்தறி நெசவாளர்கள், தோடர் நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், கைத்தறித்துறை அலுவலர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.