இ - பாசில் 2.77 லட்சம் வாகனங்களுக்கு அனுமதி: நீலகிரி கலெக்டர் தகவல் நீலகிரி கலெக்டர் தகவல்
ஊட்டி : நீலகிரியில், கடந்த கால சீசன் நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணியர் பாதியிலேயே பயணத்தை முடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவதால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க, நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு செல்ல, ஐகோர்ட் உத்தரவின் படி, இ--பாஸ் முறை கடந்த மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறை, செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டது. இது, தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 'இ--பாஸ் நடைமுறை குறித்து மறு உத்தரவு வரும் வரை தொடர வேண்டும்,' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, நீலகிரிக்கு வரும் மற்ற மாவட்ட வாகனங்கள் இ - பாஸ் பதிவு செய்து வர வேண்டும். நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இது பொருந்தாது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''இ - பாஸ் நடைமுறை கடந்த மே மாதம், 7ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. மே மாதம் முதல், செப்., 30 ம் தேதி வரை, 2.77 லட்சம் வாகனங்களுக்கு இ - பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.