முதுமலையில் முத்தான 3 குட்டி யானைகள்; பாசத்துடன் பயிற்சி அளிக்கும் பாகன்கள்
கூடலுார்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், உள்ள மூன்று குட்டி யானைகளை, ஊழியர்கள், 24 மணி நேரமும் உடனிருந்து கண்காணித்து பயிற்சி அளித்து வருவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாம், தாயை பிரிந்த மற்றும் தாயை இழந்த, யானை குட்டிகளை பராமரிப்பதில் சிறப்பான இடம் பிடித்துள்ளது. இங்குள்ள குட்டி யானைகள் ரகு, பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி பாகன் தம்பதி பொம்மன்,பெள்ளி இடையேயான, பாச உணர்வை மையமாக வைத்து, பெண் இயக்குனர் கார்த்திகி கன்சால் எடுத்த, 'த எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படம் ஆஸ்கார் விருது பெற்றது. முகாமில் மூன்று குட்டி யானைகள் அதில், இடம் பெற்ற குட்டி யானைகள், பாகன் தம்பதியை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வந்து பாராட்டி சென்றனர். இதன் மூலம் யானைகள் முகாம் உலக அளவில் பிரபலமானது. தற்போது, முகாமில் மூன்று குட்டி யானைகளை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். அதில், கோவை பெரிய நாயக்கன்பாளையம், கோவனுார் பகுதியில், தாயைப் பிரிந்த குட்டியானை, மீட்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்., 11 தேதியிலும், கோவை வனக்கோட்டம் துடியலூர் பிரிவு, தடாகம் பகுதில், தாயை பிரித்து தவித்த மூன்று மாத பெண் குட்டியானை, மீட்கப்பட்டு கடந்த ஆண்டு டிச., 30ல் தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்த்தனர். நடப்பாண்டு, கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகம் நாவக்கரை பிரிவு எம்மக்கடை வனப்பகுதியில், பிறந்து ஒரு மாதத்தில் தாயைப் பிரிந்து தவித்த ஆண் குட்டி யானை வன ஊழியர்கள் மீட்டு, மே,10ல், தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்த்தனர். இந்த மூன்று குட்டிகளுக்கும், தலா இரண்டு ஊழியர்கள், நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் உடனிருந்து கண்காணித்து வருகின்றனர். நல்ல நிலையில் உள்ள குட்டி யானைகளுக்கு, காலை, மாலை நடைபயிற்சியும் வழங்கி வருகின்றனர். இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள், அவற்றின் குழந்தை தனமான விளையாட்டை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர். முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ''தற்போது முகாமில், மூன்று குட்டிகள் உட்பட, 30 யானைகள் பராமரித்து வருகிறோம். அதில், மூன்று குட்டி யானைகளை தனி கவனம் செலுத்தி, 24 மணி நேரமும் ஊழியர்கள் உடனிருந்து கண்காணித்து வருகின்றனர். குட்டிகள் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் உள்ளது,''என்றார்.