ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில்...சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அதிகரிப்பு ஊட்டி, ஜன. 26---ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டில், 5,213 குழந்தைகள் பிறந்துள்ளன.ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனைக்கு, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுக்கா பகுதிகளை சேர்ந்த, கருவுற்ற தாய்மார்கள் ஆரம்ப கால சிகிச்சைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.நிறை மாத காலத்தில், 80 சதவீதம் கர்ப்பிணிகள், ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரசவம் நடக்கிறது.கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இந்த மகப்பேறு மருத்துவமனை கட்டடம் பொலிவுப்படுத்தப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான, 'பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டுகள்,' என, கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின், பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. 5,213 குழந்தைகள் பிறப்பு
இந்த மருத்துவமனையில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் என்ற நோக்கில், நடைபயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவு வகைகளை உட் கொள்ளவும், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதுடன், தேவையான சிகிச்சை அளிக்கின்றனர்.அதன்படி, கடந்த, 2022ம் ஆண்டில், ஜன., முதல் டிச., மாதம் வாரை, 2,682 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில், 1,340 ஆண், 1,342 பெண். 2023ம் ஆண்டில், 2,531 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில், 1,298 ஆண், 1,233 பெண். இரண்டு ஆண்டில், 5,213 குழந்தைகள் பிறந்துள்ளன.அதில், 'வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், 2022ம் ஆண்டில், 516; 2023 ம் ஆண்டில், 564 குழந்தைகள்,' என, 1,080 பிறந்துள்ளது.ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 'டீன்' கீதாஞ்சலி கூறுகையில்,''ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலிருந்து கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருகின்றனர். சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் போதிய அளவில் உள்ளனர்.மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு பொலிவுபடுத்திய பின், தனியார் மருத்துவமனைக்கு இணையாக பிரசவத்திற்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதால் இங்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகள் திறம்பட அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.