குன்னுாரில் பழுதடைந்தது சாலையில் நின்ற அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்
குன்னுார்: குன்னுாரில் அரசு போக்குவரத்து கழகம் பஸ் பழுதடைந்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பெரும்பாலும் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், நேற்று ஊட்டியில் இருந்து குன்னுார் வந்த அரசு பஸ், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பழுதடைந்து நின்றது. தொடர்ந்து போலீசார், பயணிகள், பொதுமக்கள் இணைந்து, பஸ் ஸ்டாண்ட் வரை தள்ளி வந்தனர். பிறகு நீண்ட நேரம் முயற்சித்து சிறிது, சிறிதாக ஸ்டார்ட் செய்து, அரசு பணிமனை வரை கொண்டு செல்லப்பட்டது. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடர்லி, பெள்ளட்டிமட்டம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மவுண்ட் ரோடு வழியாக திரும்பி சென்றன.இதே போல, இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவு, 7:00 மணியளவில் அருவங்காடு பகுதியில், ஊட்டி சென்ற கோவை 'எக்ஸ்பிரஸ்' பஸ் பழுதடைந்து நின்றது. சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் கடுங்குளிரில் காத்திருந்தனர். அவ்வழியாக வந்த மற்றொரு பஸ்சில் நின்று கொண்டே நெரிசலில் சிரமத்துடன் பயணம் செய்தனர். எனவே, அரசு பஸ்களை உரிய முறையில் பராமரித்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.