சாலை நடுவே மின்கம்பம்; வாகனங்கள் செல்ல இடையூறு
கூடலுார் ; கூடலுார் புளியாம்பாறை அருகே, சிமென்ட் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பம் மாற்றப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் புளியம்பாறை சந்திப்பில் இருந்து காபிகாடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை அத்துார், கொல்லுார் மற்றும் காபிகாடு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையில் புளியாம்பாறை சந்திப்பில், 500 மீட்டர் துாரம் மண் சாலையாக இருந்தது. அதில், வாகனங்கள் இயக்க முடியாததால், அரசு உயர்நிலைப் பள்ளி வழியாக அப்பகுதிக்கு சென்று வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில், மண் சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.அதனை ஏற்று சில ஆண்டுகளுக்கு முன் தேவர்சோலை பேரூராட்சி சார்பில், மண் சாலை சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட சாலையில், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை, சாலையோரத்தில் மாற்ற மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'சீரமைக்கப்பட்ட சிமென்ட் சாலை நடுவே உள்ள மின்கம்பம், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.