பள்ளி வகுப்பறையில் மாணவி தீக்குளிக்க முயற்சி; ஊட்டி அருகே அரசு பள்ளியில் பரபரப்பு
ஊட்டி : ஊட்டி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்வில் மார்க் குறைவாக வாங்கி வந்தது குறித்து பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் பங்கேற்க தனது தந்தை வருவதை அறிந்த அந்த மாணவி, புத்தக பையில், பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் அவரது தந்தை பங்கேற்றுள்ளார். அதே நேரத்தில் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் இல்லாத சமயத்தில், பாட்டிலில் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து, தன் மீது ஊற்றி உள்ளார். இதனை பார்த்த மாணவர்கள் சிலர் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து மாணவி மீது ஊற்றி அவரை அனைவரும் காப்பாற்றினர். இது குறித்து, தேனாடுகம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் மாணவிக்கு 'கவுன்சிலிங்' கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 'மாணவியை எக்காரணத்தை கொண்டும் கண்டிக்க வேண்டாம்,' என, பெற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.