காற்றுடன் பெய்த மழையால் விழுந்த மரம் மின் கம்பம் சாய்ந்து ஜீப் சேதம்
கூடலுார், ;முதுமலை, மசினகுடியில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பழமையான ஆலமரம் வேரோடு விழுந்தது; மின் கம்பம் சாய்ந்து ஜீப் சேதமடைந்தது.முதுமலை மசினகுடி பகுதியில் நேற்று முன்தினம், மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக, சிவக்குமார் காலனி பகுதியில் உள்ள பழமையான ஆலமரம் சாய்ந்தது. இதன் கிளைகள் விழுந்து, 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. மின்கம்பம் விழுந்து, ஜீப் சேதமடைந்தது. ஜீப்பில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதிக்கு மின்துறையினர் வந்து, மின்கம்பங்களை மாற்றி சீரமைத்து, மின் சப்ளை வழங்கினர்.மக்கள் கூறுகையில், 'நடப்பாண்டின் துவக்கத்தில் கோடைமழை ஏமாற்றியதால் வறட்சியின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில வாரங்களாக தொடரும் கோடைமழையினால், வனப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமைக்கு மாறியுள்ளது. வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கான உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது,' என்றனர்.