| ADDED : ஜன 21, 2024 10:46 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த செல்வநாயகம், வெண்ணிலா தம்பதியின் மகன் அஸ்வந்த், 17, எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அஸ்வந்த் கால்பந்து போட்டியில் உள்ள ஆர்வத்தால் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு கால்பந்து போட்டிகளில், தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார். கேரளா, தமிழ்நாடு லீக் போட்டிகளிலும், இரு மாநில முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளிலும் முத்திரை பதித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன், அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெற்ற, கால்பந்து போட்டியில் தமிழக அளவில் பங்கேற்ற, 18 வீரர்கள் சேர்ந்த அணியில் கேப்டன் அந்தஸ்தை பெற்றார்.அங்கு நடந்த போட்டியில் வெற்றி பெற விட்டாலும், மாநில கடை கோடியில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர், இந்திய அளவில் பங்கேற்ற அணியில் கேப்டன் பொறுப்பை வகித்தது, நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. அஸ்வந்த் கூறுகையில், ''நம் நாட்டின் தேசிய அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது. என் முயற்சிக்கு மாநில, மாவட்ட விளையாட்டு அமைப்புகள் உதவி செய்தால், நிச்சயம் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்துவேன்,'' என்றார்.